கொழும்பிலிருந்து யாழ். விரைந்த அதிரடிப் படையின் சிறப்புப் பிரிவு! தேடுதல் நடவடிக்கை தீவிரம்

பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள நிலையில், அதிரடிப் படையின் சிறப்புப் பிரிவினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து நேற்று யாழ் நோக்கிச் சென்ற அவர்கள், யாழின் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி வடமராட்சி கிழக்கில் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோர் கடலோரக் காவற்படையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

மறுநாள் 22ஆம் திகதி நல்லூரில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது. அதில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார்.

கடந்த 26ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து தமிழ் பொலிஸ் அதிகாரி மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில், கொக்குவில் பகுதியில்வைத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் மீது நேற்றுமுன்தினம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களான குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.டி.கே.தர்மிக்க ரத்நாயக்கா (வயது 34) மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த ஏ.கே.சுரேந்திரன் (வயது 26) ஆகிய இருவர் மீதும் பட்டப்பகலில் இனந்தெரியாத இளைஞர்கள் குழுவினரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5 மோட்டார்சைக்கிள்களில் 10இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். வாள் மற்றும் பாரிய கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, மானிப்பாயில் நேற்றுமுன்தினம் இளைஞரொருவர் மீதும் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

முகங்களைக் கறுப்புத்துணிகளால் கட்டிக்கொண்டு வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 6 பல்சர் ரக மோட்டார் சைக்கிள்களில் சென்ற 12 பேர் கொண்ட கும்பல் குறித்த இளைஞரின் வீட்டுக்குள் புகுந்து அவரைத் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தத் தொடர் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, வாள்வெட்டுக் குழுக்களை கைது செய்வதற்காக அதிரடிப் படையின் அதி சிறப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

You may also like...

0 thoughts on “கொழும்பிலிருந்து யாழ். விரைந்த அதிரடிப் படையின் சிறப்புப் பிரிவு! தேடுதல் நடவடிக்கை தீவிரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: