மார்க்கிற்கு அடுத்த இடி பேஸ்புக்கை விட்டு வெளியேறினார் ஸ்பேஸ் நாயகன் எலோன் மஸ்க்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் பேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளார். அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கங்களும் டெலிட் செய்யப்பட்டு இருக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
சமூக வலைதளத்தில் டெலிட் பேஸ்புக் என்ற ஹேஷ்டேக் வைரல் ஆனது. பலரும் பேஸ்புக் அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் இருந்து நீக்கினார்கள். பெரிய பிரபலங்கள் கூட தங்கள் கணக்கை முடித்துக் கொண்டு பேஸ்புக்கில் இருந்து விலகினார்கள்.
தொடக்கத்தில் பேஸ்புக் அப்ளிகேஷனை மொபைலில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் பிரைன் ஆக்டன் கோரிக்கை வைத்தார். அதில் ”இதுதான் நேரம் உடனடியாக பேஸ்புக்கை டெலிட் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட் டெக் உலகில் பெரிய புயலை கிளப்பி இருந்தது.
இந்த நிலையில் பேஸ்புக் பிரச்சனையில் டெஸ்லா நிறுவன தலைவர் எலோன் மஸ்க் தலையிட்டு இருக்கிறார். பிரைன் ஆக்டன் டிவிட்டில் எலோன் ”பேஸ்புக்கா அப்படி என்றால் என்ன?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் அவருக்கும் பேஸ்புக் மீது கோபம் என்று கூறப்பட்டது.
மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் இவர்தான். சமீபத்தில் உலகின் பெரிய பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு தன்னுடைய சொந்த காரை அனுப்பி சாதனை படைத்தவர். நாசா நிறுவனமே இவரிடம் பலமுறை உதவி கேட்டு இருக்கிறார். டெஸ்லா கார் நிறுவனத்தின் நிறுவனரும் இவர்தான்.
இந்த நிலையில் பேஸ்புக்கில் இருந்து எலோன் வெளியேறி இருக்கிறார். அதேபோல் அவரது நிறுவன கணக்கும் பேஸ்புக்கில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. டெலிட் பேஸ்புக் பிரச்சாரம் பெரிதானதை அடுத்து எலோன் மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதற்கு எலோன் மஸ்க் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ”நான் பேஸ்புக்கை விட்டு வெளியேறியதற்கு பின் பெரிய அரசியல் எதுவும் இல்லை. எனக்கு பேஸ்புக் பிடிக்கவில்லை. மேலும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது பேஸ்புக்கிற்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
- Previous மொபைல்போன் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் ஆவலை தூண்டும் வலைத்தளம்
- Next கோடி கணக்கான பணத்தினை இழந்து கோபுரத்தில் இருந்து குடிசைக்கு சென்றவர்கள்!
You may also like...
Sorry - Comments are closed