பிணையில் வருகிறார் ஞானசாரர்? அரசாங்கத்திற்குள் முரண்பாடு

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கலாமென நம்புவதாக நீர்ப்பாசன, நீர்வழி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியக் குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஞானசார தேரரை நேற்று சிறைக்குச் சென்று பார்வையிட்டதையடுத்தே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”ஞானசார தேரர் சிறைச்சாலையில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். எனினும், அவருக்கு பிணை வழங்குவது தொடர்பிலான மனு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாம் இந்த விடயத்தில் சட்டத்துக்கு சவால் விடுக்கும் வகையில் செயற்பட முடியாது.

எவ்வாறாயினும், அடுத்த வெள்ளிக்கிழமையன்று அவரை பிணையில் எடுக்க முடியும் என நாம் நம்புகிறோம். இது தொடர்பிலான ஏனைய விடயங்களை அவர் வெளியில் வந்தவுடன் தெரிந்துகொள்ள முடியுமாக இருக்கும்” என்றார்.

ஞானசார தேரரை விடுவிக்குமாறு பலர் போராடி வருகின்ற நிலையில், குற்றமிழைத்தவர் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாதென்றும் தேரர்களுக்கு தனிச்சட்டம் இல்லையென்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் அவரை பிணையில் விடுவிக்கலாமென அமைச்சர் துமிந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: