ராமாபுரத்தில் மகனை தந்தையே குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமாபுரத்தில் மகனை தந்தையே குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமாபுரம், செந்தமிழ்நகர் வேம்புலி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். பெயிண்டர். இவரது மனைவி லோகநாயகி.

இவர்களது மகன் சதீஷ் (வயது21). கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார். மகள் சங்கீதா மெடிக்கல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

சக்திவேலுவுக்கும் அவரது மகன் சதீசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. குடும்பத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் இருந்தபோது சக்தி வேல்-சதீஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் லோகநாயகியும், மகள் சங்கீதாவும் சமாதானப்படுத்தி விட்டு அனைவரும் அறையில் தூங்கினர்.

ஆனால் சக்திவேல், மகன் சதீஷ் மீது தொடர்ந்து கோபத்தில் இருந்தார். அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதிகாலை 3 மணியளவில் எழுந்த சக்திவேல் திடீரென வீட்டில் இருந்த கத்தியால் மகன் சதீசை சரமாரியாக குத்தினார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த லோகநாயகியும், சங்கீதாவும் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் அவர்கள் சக்தி வேலை தடுக்க முயன்றனர்.

இதில் சங்கீதா, லோகநாயகிக்கும் கத்தி வெட்டு விழுந்தது. இதற்குள் பலத்த காயம் அடைந்த சதீஷ், தாய், தங்கையின் கண் முன்னாலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே சக்திவேலை, சங்கீதாவும், லோகநாயகியும் மடக்கி பிடித்து வீட்டின் உள்ளேயே வைத்து பூட்டி சிறை வைத்தனர். இதுபற்றி ராயலாநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையாளி சக்தி வேலை கைது செய்தனர். சதீசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. சதீசின் நடத்தையில் சந்தேகப்பட்டு சக்திவேல் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: