தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா?

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் பற்றி இந்தியா முன்கூட்டியயே எச்சரித்திருந்தது. எனினும், அந்த எச்சரிக்கை முறைப்படி பகிரப்படவில்லையென்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கை பாதுகாப்பு செயலர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பதவிவிலகலாமென்ற கருத்து நிலவுகிறது.

ஐ.எஸ் அமைப்பு இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது என்ற தகவலை இந்திய உளவுத்துறை எப்படி அறிந்து கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களின் முன்னர், இந்தியாவின் கோவை பகுதியில் கைதான ஐ.எஸ் ஆதரவாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையிலேயே இந்த தகவல் கிடைத்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியாவிலும் மேற்கொள்ளும் விதமாக தமிழகத்தை சேர்ந்த சிலர் அமைப்பு ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்ததை தேசிய புலனாய்வுமுகமை (என்.ஐ.ஏ) கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்தது.

இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென்இந்தியாவைச் சேர்ந்த இந்து அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக இரகசிய விசாரணை நடத்தி வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 7 பேரை கோவையில் கைது செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முகமது ஆஷிக் (வயது 25), இஸ்மாயில் (25), சம்சுதீன் (20), முகமது சலாவுதீன் (25), ஜாபர் சாதிக் அலி (29), சாகுல் அமீது உள்ளிட்ட அந்த 7 பேர் மீதும், இந்து தலைவர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொல்ல திட்டமிட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதுடன், அவர்களிடம் இருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். இதில் சில வீடியோக்களும் அடங்கும். அதில் சில வீடியோக்களில் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தலைவரான சஹ்ரான் ஹாசிமின் வீடியோக்களும் இருந்தன.

அதில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தமிழகம், கேரளா, இலங்கை உள்ளடக்கிய பிராந்தியத்தில் இஸ்லாமிய அரசை நிறுவ உழைக்குமாறு இந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு சஹ்ரான் ஹாசிம் அழைப்பு விடுக்கும் வீடியோக்களும் இருந்தன.

இது தொடர்பாக மேலும் விசாரணையை முடுக்கி விட்ட அதிகாரிகள், ஐ.எஸ். தொடர்பான சில சமூக ஊடக கணக்குகளை சைபர் கிரைம் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் இலங்கையில் உள்ள சில தேவாலயங்களை ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்பதை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாகவும் இந்த தகவல்கள் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு இருந்ததாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்துள்ள நிலையில், கோவையில் கைதானவர்களுக்கு அந்த தாக்குதல் தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியுமா? என்பது குறித்து மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: