மாணவர் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலை சுற்றாடலில் பதாதைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் கைது நடவடிக்கையை எதிர்த்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ் பல்கலை கழகத்தை சுற்றி இன்று பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்தது நாட்டின் பாதுகாப்பு கருதி அவசரகால சட்டம் அமுலுக்கு வந்தது. பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில்  கடந்த 3 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தினுள் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடைய புகைப்படம் இருந்ததாக தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர்.
அன்றைய தினம் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் தியாகி திலீபனுடைய புகைப்படம் இருந்ததாக தெரிவித்து அங்கு பணியில் இருந்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளரையும் பொலிசார் கைது செய்திருந்தனர்.

இந்த கைது நடவடிக்கை அரசின் திட்டமிட்ட செயல் என்றும், மாணவரின் எதிர்காலத்தை சிதைத்து தமிழ் இனத்தின் குரலை அடியோடு நசுக்கும் செயல் என தெரிவித்து பலர் தமது எதிர்ப்பை தெரிவித்து வருவதுடன் அவர்களுடைய விடுதலையையும் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் மாணவர்களை விடுவிப்பதற்காக பல்கலைச் சமூகத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்கலை சூழலில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் “வீணே சிறையிருக்கும் எம் மாணவர்களையும் சிற்றூண்டிச்சாலை நடத்துனரையும் விடுதலை செய்து நாட்கள் விரையமாகாமல் கல்வி நடவடிக்கைகள் தொடங்க ஆவண செய்க!, விரைந்து சிறைக்கதவுகள் திறக்கட்டும்,வீணே மூடிக்கிடக்கும் எங்கள் பல்கலைக்கழகத்தின் கதவுகளும் திறக்கட்டும், காக்கவென வந்த சட்டங்கள் அப்பாவிகளுக்கெதிரானது ஏன்?, மாணவர்களின் கல்வி சிறையிலா?
என்ற வசனங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: