நியூசிலாந்து வெற்றி!

உலகக் கிண்ண கிரிக்கெட்டில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 9வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் ரொஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ‌ஷகிப் அல் ஹசன் 64 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 4 விக்கெட்களும், டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும், பெர்குசன், கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் குப்தில், கொலின் முன்ரோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் குப்தில் 25(14) ரன்களும், முன்ரோ 24(34) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கப்டன் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் கேன் வில்லியம்சன் 40(72) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரொம் லாதம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ரோஸ் டெய்லர் 82(91) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிராண்ட் ஹோம் 15(13) ரன்களும், ஜேம்ஸ் நீஷம் 25(33) ரன்களும் எடுத்து வெளியேறினார்.

இறுதியில் மிட்செல் சாண்ட்னர் 17(12) ரன்களும், பெர்குசன் 4(3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி 47.1 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

பங்களாதேஷ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன், ஹொசைன், முகமது சைபுதீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் ரோஸ் டெய்லர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: