அவுஸ்திரேலியாவை சமாளிக்குமா இலங்கை?

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 17வது நாளான இன்று (சனிக்கிழமை) லண்டன் ஓவலில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலிய அணி, முன்னாள் சம்பியனான இலங்கையை சந்திக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. தனது 3வது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் மயிரிழையில் வீழ்ந்தது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு வலுவாக உள்ளது. டேவிட் வோர்னர், கப்டன் ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்தி வருகிறார்கள். டேவிட் வோர்னர் பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சதம் விளாசி கலக்கினார். பந்து வீச்சில் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நதன் கவுல்டர் ஆகியோர் சவாலாக திகழ்கிறார்கள். அந்த அணிக்கு சுழற்பந்து வீச்சு தான் இன்னும் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் நதன் லயன் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷூக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இலங்கை அணி அனைத்து துறைகளிலும் தடுமாறி வருகிறது. இலங்கை அணி எல்லா துறைகளிலும் எழுச்சி பெற்றால் தான் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்துக்கு அணை போட முடியும்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

அவுஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கப்டன்), டேவிட் வோர்னர், ஸ்டீவன் சுமித், மக்ஸ்வெல், ஷோன் மார்ஷ் அல்லது நதன் லயன், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, நதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன்.

இலங்கை: கருணாரத்ன (கப்டன்), குசல் பெரேரா, திரிமன்ன, குசல் மென்டிஸ், மத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்க லக்மல், மலிங்க, நுவான் பிரதீப் அல்லது ஜெப்ரே வாண்டர்சே.

மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-தென்னாபிரிக்கா மோதல்

கார்டிப்பில் மாலை 6 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்காத ஆப்கானிஸ்தான்-தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன. குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது. பொப் டுபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டது. மேற்கிந்தியத்தீவுகளிற்கு எதிரான முந்தைய லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி ஒரு புள்ளியை பெற்றது. தென்னாபிரிக்க அணியில் சிறந்த துடுப்பாட்டக்காரர்கள், பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் உத்வேகம் இல்லாத ஒரு அணியாகவே விளங்கி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் நிச்சயம் தென்னாபிரிக்க அணிக்கு குடைச்சல் கொடுப்பார்கள். இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் தென்னாபிரிக்க அணியின் அரை இறுதி வாய்ப்பு மங்கி விடும். இதனால் அந்த அணிக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாகும். முதல் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த இரு அணிகளும் இதுவரை ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: