தற்கொலைக்கு முற்பட்ட இலங்கை அகதிகள் உள்பட 20பேர்! பொலிஸ் விசாரணை

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 20 அகதிகள் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில், வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 38பேர் மற்றும் வங்காளதேசத்தினர், பல்கேரியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசா காலம் முடிந்து சட்ட விரோதமாக தங்கிருந்தவர்கள், போலி கடவுசீட்டு மூலம் நுழைந்தவர்கள், கஞ்சா, மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முகாமில் உள்ள 46 கைதிகள் தங்களுக்கு தண்டனை காலம் முடிந்ததால் தங்களையும் விடுவிக்க கோரி அதிகாரிகளிடம் கேட்டு வந்தனர். ஆனால் சில பிரச்னைகளால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் இலங்கை தமிழர்கள், வங்காளதேசம், சீனா, பல்கேரியா நாட்டை சேர்ந்த 46 பேர் தங்களை உடனடியாக தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் பேசினர். ஆனாலும் கைதிகள் போராட்டம் விடிய விடிய நடந்தது. இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது.

இந்த நிலையில் இன்று காலை முகாம் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 46 கைதிகளில் 20 கைதிகள் வி‌ஷம் குடித்ததாக கூறப்பட்டது. அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்ததால் உடனடியாக அங்குள்ள முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முகாமில் கைதிகளுக்கு வி‌ஷம் எப்படி கிடைத்தது, அவர்கள் எந்த வகையான வி‌ஷம் சாப்பிட்டனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: