வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

வடக்கு கிழக்கில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கடும் மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

கிளிநொச்சி – இரணைமடுக் குளம் நிரம்பும் நிலையில் அதன் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் முத்தையன் கட்டுக்குளம் உள்ளிட்ட பல குளங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தினாலும், குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுளள்ளதாலும், இரண்டு மாவட்டங்களிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 22 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 17,062 குடும்பங்களைச் சேர்ந்த 55,453 பேர் பாதிக்கப்பட்டுள்னர் என்று தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 51,223 குடும்பங்களைச் சேர்ந்த 1,70,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 826 குடும்பங்களைச் சேர்ந்த 2,622 பேர் 20 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால், 9,953 குடும்பங்களைச் சேர்ந்த 33,288 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 39,849 குடும்பங்களைச் சேர்ந்த 1,32,573 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 1421 குடும்பங்கபளைச் சேர்ந்த 4848 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: