இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் தொடுப்பதற்கான முயற்சி

சீனா இராணுவ வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது.

ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது.

இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது.

 

தற்போது, லடாக் எல்லையில் இந்தியா-சீனா இராணுவங்கள் படைகளைக் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

அதே சமயம், பிரச்னைக்குரிய தென்சீன கடல் பகுதியிலும், தைவான் நீரிணை பகுதி அமெரிக்க போர்க்கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா நோய்த்தொற்று சீனாவின் மூலம்தான் உலக நாடுகளுக்கு பரவியது. இதில் சீனா உள்நோக்கத்துடன் செயல்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இதனால் அமெரிக்கா-சீனா இடையேயும் பிரச்னை உள்ளது. எனவே, சீன அதிபரின் அறிவிப்பை அமெரிக்காவுக்கு எதிரான மறைமுக போர் பிரகடனமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று சா்வதேச அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

 

இந்தப் பின்னணியில் அதிபா் ஷி ஜின்பிங் இராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அதில் எந்த ஒரு நாட்டின் பெயரையும் ஷி ஜின்பிங் குறிப்பிடாமல் கூறியுள்ளதாவது:

சீன இராணுவம் தனது பயிற்சியை அதிகரிக்க வேண்டும். போருக்கு முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். எவ்வித சிக்கலான சூழ்நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள இராணுவம் தயாராக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, வளா்ச்சிக்கு இடையூறாக உள்ள பிரச்னைகளை நாம் தீா்க்க வேண்டும் என்று அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-ஆவது மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள சீனா, அண்மையில் இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 6.6 சதவீதம் அதிகரித்து, 179 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியது. இது இந்திய இராணுவ ஒதுக்கீட்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: