குடும்ப பிரச்சனை காரணமாக அனாதையாக்கப்பட்ட குழந்தை

தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த அதிர்ச்சி காரணமாக கணவரும் தற்கொலை செய்து கொண்டதால், தற்போது 5 மாத குழந்தை அனாதையாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள காரியானூரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு சத்யாதேவி என்ற 23 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் சத்யாதேவிக்கும், அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, நல்லாம்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கணேசன் (26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்ற சத்யாதேவி, குழந்தை பிறந்ததிலிருந்து அங்கேயே தங்கியுள்ளார்.

 

இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தையை தனது சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரியானூர் கிராமத்திற்கு கணேசன் சென்றுள்ளார்.

அப்போது கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது.

இதில் மனமுடைந்த சத்யாதேவி தனது வீட்டின் அறைக்குள் சென்று, மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார்.

உடனே, உறவினர்கள் கதவை உடைத்து சத்யாதேவியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன் அதே வீட்டில் மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: