வேட்ப்பாளர்களின் முடிவுகளை வியாழன் இரவுக்குள் அறிய முடியும்

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிப் பெறுபேறு நாளை மறுதினம் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

விருப்பு வாக்கு பெறுபேறுகளை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காலி பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது, “கம்பஹா மாவட்டத்தில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்குகே கூடுதலான நேரம் தேவைப்படும்.

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் தமக்குரிய நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்.

வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் விரைவாக எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்தல் நடைபெறும் நாளைய தினம் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை. குழப்பநிலை ஏற்படக்கூடிய வாக்களிப்பு பிரதேசங்களில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கலகங்களை அடக்கும் படைப்பிரிவினர் தேவையில்லை. அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. இருப்பினும் நாம் அதற்குத் தயாராகவுள்ளோம். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடியதாக இருக்கும். விருப்பு வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை 7ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும்.

ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி தேர்தல் தொடர்பான முழுமையான வர்ததமானியை வெளியிடக்கூடியதாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: