மந்திரவாதி தாக்கியதில் பெண் உயிரிழப்பு

இந்தியாவில் மந்திரவாதி தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் மல்லேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ரஜிதா 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிரசவம் நடந்த நாளிலிருந்து ரஜிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

இதனால் மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து கொண்டு, மல்லேஷ் உள்ளூர் பேய் ஓட்டியான ஷியாம் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

 

அவர் ரஜிதாவின் மீது இருக்கும் பேயை ஓட்டுவதாக கூறி, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில், அடி தாங்க முடியாமல், உடல்நிலை மோசமாகி ரஜிதா, அந்த இடத்திலே மயங்கிய நிலைக்கு சென்றார்.

இதையடுத்து உடனடியாக அவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ரஜிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், இத்தனை நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண்ணை ஏன் மருத்துவமனைக்கு அழைத்து வரவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்ப, இந்த விவகாரம் உடனடியாக பொலிசாருக்கு தெரியவந்தது.

அதன் பின் பொலிசார் ரஜிதாவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக மந்திரவாதி ஷியாம், மல்லேஷின் உறவினர் ஒருவரை கைது செய்தனர். தப்பி ஓடிய கணவர் மல்லேஷை பொலிசார் தேடி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: