யாழ் மாவட்டம் அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளது

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது. அனைவரும் கவனமாக செயற்பட வேண்டும் யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இல் இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது. பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு இந்த கொரோனா தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விபரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: