வெளிநாட்டில் இருந்து சொந்த நாட்டிற்கு வந்தவர்கள் விபத்தில் பலி

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேர் சாலை விபத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் மயில்சாமி (37). இவரது மனைவி இந்து (36).

மயில்சாமி துபாயில் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்து ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்து துபாயில் இருந்து கோவைக்கு திரும்பி வந்துவிட்டார். கடந்த வாரம் மயில்சாமி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடியே துபாயில் உள்ள ஒரு கம்பெனியில் ஓன்லைன் மூலம் இந்து வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே டென்மார்க் சென்று வேறு நிறுவனத்தில் வேலையில் சேர தம்பதி முடிவு செய்து இருந்தனர். இ்தற்காக குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல மயில்சாமி முடிவு செய்தார்.

இதற்காக கோவையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஒரு காரில் குடும்பத்துடன் புறப்பட்டனர். காரை மயில்சாமி ஓட்டினார். காரின் முன் இருக்கையில் இந்து அமர்ந்திருந்தார். பின் இருக்கையில் இந்துவின் தாயார் கவுசல்யா (60), மயில்சாமியின் மகன் கவுதம் (13), மயில்சாமியின் தம்பி மகள் ரம்யா (11), மயில்சாமியின் உறவினர் கலைவாணி (46) ஆகியோர் இருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வழியாக கார் சென்று கொண்டிருந்தது. வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே காலை 5 மணி அளவில் கார் வந்த போது கோவையில் இருந்து அட்டைப்பெட்டி ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற லொறி ஒன்று பழுதடைந்து சாலையில் நின்றுகொண்டிருந்தது.

லொறியில் ஏற்பட்ட பழுதை ஓட்டுனர் பாபு (40) சரி செய்துகொண்டிருந்தார். அப்போது மயில்சாமி ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக லொறியின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி, அவரது மனைவி இந்து, இந்துவின் தாயார் கவுசல்யா ஆகியோர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த கலைவாணி, கவுதம், ரம்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

பின்னர் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த பொலிசார், சாலையில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை தடுப்பு வைக்காமல் லொறியை பழுது பார்த்த அதன் ஓட்டுனர் பாபுவை கைது செய்தனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: