தத்துக்கொடுத்த தாயை தேடும் இலங்கை பெண்

லண்டனில் வாழும் யாசிகா பெர்னாண்டோவுக்கு 18 வயதாகும்போது, அவரது பெற்றோர் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியை சொன்னார்கள்.

அது, தாங்கள் யாசிகாவை பெற்றவர்கள் அல்ல, யாசிகா மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போது தத்துக்கொடுக்கப்பட்டவர் என்பதுதான்.

1980களில், யாசிகாவை வளர்த்த டொனால்டும், யசந்தாவும் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்திருந்தார்கள்.

பெற்ற பிள்ளையைப்போல் அவர்கள் யாசிகாவை நேசித்ததால், யாசிகாவுக்கு தன்னை பெற்றவர்களின் எண்ணம் அதிகம் வரவில்லை என்றாலும், 31 வயதானபோது யாசிகா, இவானி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, தானும் இதேபோல் இருக்கும்போதுதானே தன்னை தன் தாய் தத்துக்கொடுத்தார்.

இப்படி ஒரு அருமையான பாசப்பிணைப்பு கொண்ட ஒரு குழந்தையை தத்துக்கொடுக்க யாருக்கு மனம் வரும் என்ற கேள்வி யாசிகாவின் மனதில் எழுந்தது.

அப்போது, இலங்கையில் ஒரு வீட்டிலிருந்து யாசிகாவை தாங்கள் தங்கள் கைகளில் வாங்கிக்கொண்டபோது, ஒரு பெண் ஓவென கண்ணீர் விட்டுக் கதறும் சத்தத்தை தாங்கள் கேட்டதை நினைவுகூர்ந்தார்கள் டொனால்டும், யசந்தாவும்.

அப்போது முடிவு செய்தார் யாசிகா, தன்னைப் பெற்ற தாயை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்று. யாசிகாவும் அவரது கணவர் திலக்கும் இலங்கைக்கு புறப்பட்டார்கள்.

சிலரது உதவியுடன் அவர் பிறந்த இடமான கொழும்புக்கு சென்று தேடியபோது, யாசிகாவின் தாயைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை.

நீண்ட அலைச்சலுக்குப் பின் தன்னை தத்துக் கொடுக்க ஏற்பாடு செய்த கான்வெண்டுக்கு சென்றபோது, அவர்களுக்கு யாசிகாவின் தாய் இருந்த இடம் தெரிந்திருந்தாலும், அவர் இப்போது தான் தத்துக்கொடுத்த மகளை சந்திக்க தயாராக இருக்கிறாரா என்பது தெரியாததால், அதற்குள் யாசிகா லண்டன் திரும்பவேண்டிய நேரமும் வந்துவிட்டது, தாயை சந்திக்காமலே, இதயத்தை இலங்கையிலேயே விட்டு விட்டு பிரித்தானியாவுக்கு திரும்பினார் யாசிகா.

ஆனால், யாசிகாவின் தாயைக் கண்டுபிடிப்பதில் உதவியவரான சிறி சில்வா என்பவர், அவரை சந்தித்து அவர் யாசிகாவை சந்திக்க தயாராக இருப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

ஆனால், கொரோனா காரணமாக இப்போதைக்கு யாசிகாவால் இலங்கைக்கு செல்லமுடியாது என்பதால், வீடியோ அழைப்பு மூலம் தாயை சந்தித்திருக்கிறார்.

என்னை ஏன் தத்துக்கொடுத்தீர்கள் என அவர் தாயிடம் கண்ணீர் விட்டுக் கதறியிருக்கக்கூடும், பதிலுக்கு அந்த தாயும் கண்ணீர் வடித்திருக்கலாம். அந்த விவரங்கள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளியாவதால் அளிக்கப்படவில்லை.

என்றாலும், யாசிகாவும் அவரது கணவர் திலக்கும், தங்கள் மகள் இவானி மற்றும் புதிதாக பிறந்திருக்கும் இன்னொரு மகளையும் அவர்களது பாட்டிக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி மட்டுமே கிடைத்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: