நண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்

தமிழகத்தில் உயிரிழந்த நண்பரின் குடும்பத்தாருக்கு லட்சக்கணக்கிலான பணத்தை கொடுக்க சென்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்கத்தின் மனைவி உமா வாசுகி (44). இவர் மதுரை ஆயுதப்படை பொலிசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

இவரும், இவருடன் பணிபுரியும் ஏட்டு சித்திரைவேல் (46), திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பொலிஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சிங்ககோட்டையை சேர்ந்த வீரராகவன் (46), கோவையில் சி.பி.சி.ஐ.டி. பொலிசாக பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஜான்சன் அமிர்தராஜூவின் மனைவி நிர்மலா ஜெரால்டு (44) மற்றும் பொலிஸ்காரர்கள் ராமர் (53), பூபதி (45), தனசேகரன் (42), அழகுவேல்வள்ளி (45), நாட்டராஜன் (46) ஆகிய 9 பேரும் கடந்த 1997-ம் ஆண்டு பொலிஸ் பணிக்கு தேர்வானவர்கள்.

மேலும் இவர்கள் நண்பர்கள் ஆவார்கள். இவர்களுடன் பொலிஸ் பணிக்கு தேர்வான கள்ளக்குறிச்சியை சேர்ந்தவரும், சின்னசேலம் பொலிஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவருமான ராஜ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார்.

இதனால் 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பொலிசாரால் சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப்பில் “உதவும் கரங்கள்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட குரூப் மூலம் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிட, போலீசாரிடம் மொத்தம் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

அந்த தொகையை ராஜ்குமாரின் குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக உமா வாசுகி, சித்திரைவேல், வீரராகவன், நிர்மலா ஜெரால்டு ஆகிய 4 பேர் ஒரு காரிலும், ராமர், பூபதி, தனசேகரன், அழகுவேல்வள்ளி, நாட்டராஜன் ஆகிய 5 பேர் மற்றொரு காரிலும் மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.

4 பேர் வந்த காரை சித்திரைவேல் ஓட்டினார். அந்த கார் நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே வந்தது.

அப்போது காரின் முன்னால் நெல்லையில் இருந்து ஆவடி நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால், பின்னால் வந்த கார் பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த உமா வாசுகி, சித்திரைவேல், வீரராகவன், நிர்மலா ஜெரால்டு ஆகியோர் உயிருக்கு போராடினர்.

இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உமா வாசுகி பரிதாபமாக உயிரிழந்தார். சித்திரைவேல், வீரராகவன், நிர்மலா ஜெரால்டு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் டிரைவரான நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனை (41) பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: