தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்!

ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ.கௌதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இதனை தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், 1981ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு, ஜூலை கலவரத்தில், சிங்கள அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில், உயிர் பிழைக்க உலகம் முழுக்க சிதறியது ஈழத் தமிழினம். ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், நம் தாய்த் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தார்கள்.

மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, நம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு, தமிழ்நாட்டின் முதல்வர் இனியும் காலம் தாமதிக்காமல், “இரட்டை குடியுரிமை” வழங்க வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாக, நம் தமிழ் மண்ணில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களில், 70 ஆயிரம் பேர் அகதிகள் முகாம்களிலும், 30 ஆயிரம் பேர் அரசாங்கத்தில் பதிந்து, வெளியில் வீடு எடுத்தும் தங்கி இருக்கிறார்கள்.

அமெரிக்கா, கனடா, லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் எத்தனையோ பேர் அந்நாட்டின் உயர் பதவிகளை அலங்கரிக்கிறார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் இங்கிருப்பவர்களில் ஒருவர் கூட, உயர்படிப்பு படித்தோ அல்லது படித்த படிப்பிற்கான மதிப்பில் அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ இதுவரையில் வேலைக்கு செல்ல முடியவில்லை.

அதற்கு காரணம் இந்திய ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மைதான். திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகள் கூட ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கவிடாமல் மறுக்கப்படுகிறது.

சிங்கள அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட இன அழிப்புக்கு பிறகு அவர்கள் இன்னும் கூடுதலான வலிசுமந்த வாழ்க்கையைத்தான் நம் தமிழ்நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழ்ச் சொந்தங்கள், இந்திய ஒன்றிய அரசு எங்கள், தந்தையர் தேசம், தமிழ்நாடு எங்கள் தொப்புள்கொடி உறவுகள் வாழ்கின்ற தாய்மடி என நம்பி வந்தவர்கள்.

ஆனால் இன்றுவரை வாழ வழியற்று நின்று கொண்டிருக்கிறார்கள்.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படி அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது மட்டுமே, இருண்டு கிடக்கும் அவர்களின் வாழ்வின் மீதமுள்ள காலத்தையாவது அழகானதொரு வாழ்க்கையாக வாழ காரணமாக அமையும்.

இராஜபக்சேவின் கொடூர சித்திரவதை முகாம்கள் உலகம் அறிந்ததே. ஏறக்குறைய அந்த முகாம்களுக்கு இணையானதுதான் திருச்சி சிறப்பு முகாம். யுத்தம் முடிந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் அந்த முகாம் தமிழ்நாட்டில் நிலை கொண்டிருப்பது வேதனையிலும் பெரும்வேதனை.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: