யாழ்ப்பாணத்தில் இப்படியொரு வைத்தியரா? அதிசயிக்கும் மக்கள்!

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடம்பெற்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் துணைக்குச் சென்றிருந்தேன். எனது பணப்பையில் ரூபா.500, ரூபா.1000 எனப் பல நோட்டுகள் இருந்தாலும் கையில் ரூபா. 5000/- ஐ எடுத்து ஆயத்தமாக வைத்துக் கொண்டேன்.

( ரூபா.1500 க்கு அதிகமாக வரலாம் என்பதேஎனது எதிர்பார்ப்பு) அந்த வைத்தியசாலைக்கு எமது விஜயம் அதுவே முதல் தடவை என்றதால் வைத்தியரின் ஆலோசனைக் கட்டணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த வைத்தியசாலையின் காசாளர் கரும பீடத்தை நெருங்கினேன். வைத்தியரின் கட்டணம் பற்றி விசாரித்தேன். ரூபா 500.00 ஐ செலுத்துமாறு காசாளர் கூறினார். நான் அதிர்ந்து போனேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்குரிய கட்டணமாக ரூபா 1000அல்லது அதற்கு மேலேயே தான் அறவிடுவது வழக்கம். அப்படியாயிருக்கும்போது போது ஏன் இவர்கள் வெறும் 500 ஐ அறவிடுகிறார்கள்? ஒரு வேளை தவறாகச் சொல்லிவிட்டாரோ அவர்? எனக்குள் எழுந்த கேள்வி இது. “அம்மா! 1500 ரூபாவா?” என்று நான் கேட்டேன். “இல்லை! வெறும் 500” என்றார் அவர். “என்ன 500 ஆ?அதுவும் இந்த மிக திறமைமிக்க புற்று நோய் வைத்தியருக்கு ஏனைய வைத்தியர்களின் கட்டணத்தின் அரைவாசியா? என்னால் நம்ப முடியவில்லை. கேட்டு விட்டேன். அது மட்டுமல்லாது பொதுவாகத் தனியார் வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்க்கவரும் பெரும்பாலான வைத்தியர்கள் குறித்த நேரத்துக்கு வருவதில்லை என்பது வரலாறு.

அவர்கள் நோயாளரைப் பார்வையிடும் நேரமாக அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் இருந்து அரை மணித்தியாலமோ அல்லது ஒரு மணித்தியாலமோ தாமதித்து வருவதுதான் வழமை. ஆனால் இந்த வைத்தியர் குறித்த நேரத்துக்குள் வந்தார். அதுவும் தமிழர் பாரம்பரிய உடையில். ஆச்சரியத்தால் என் கண்கள் அகல விரிந்து கொண்டன.

வந்த வைத்தியர் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கவில்லை என்பது தெரிந்தது. என்னோடு வந்தவரை மிகுந்த கனிவுடனும் கரிசனையுடனும் கவனித்தார். அவருக்கு இருக்கும் பிரச்சினைகள் அத்தனையையும் கேட்டுத் தெளிவு பெற்றார். மிகவும் கவனத்தோடு ஆலோசனை வழங்கினார். எமக்கு மட்டுமல்ல வந்த அனைவரையும் இவ்வாறுதான் நடத்தியதாகப் பின்னர் அறிந்து கொண்டோம்.

அன்று மட்டுமல்ல அந்த வைத்திய கலாநிதி என்றும் இவ்வாறுதான் நோயாளரை அணுகுவதாகச் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை எமக்கு அது இலவசமாக கிடைத்த மருத்துவ ஆலோசனை என்றே மனதில்பட்டது. 500.00 ரூபாய்க்கு மருத்துவ ஆலோசனை என்பது இன்று நினைத்து பார்க்க முடியாதது. அதுவும் மருத்துவம் சேவை என்பதற்கு அப்பால் எப்போது வியாபாரமாகப் போய்விட்டதோ… அன்றே குறைந்த கட்டணம் என்ற விடயமும் பகல் கனவாகிவிட்டது.

சாதாரண மக்களாலும் செலுத்தக் கூடிய ரூபா.500 ஐத் தனது கட்டணமாக்கிக் கொண்ட அவர் என்னைப் பொறுத்தவரை வைத்திய சேவைக்கு முன் உதாரணமானவர் மற்றும் பல வைத்தியர்கள் பின் பற்ற வேண்டிய ஒருவர். அன்று இந்த வைத்தியர் தனது கட்டணமாக ரூபா 2000ம் அறவிட்டாலும் ஏற்றுக் கொண்டு செலுத்தியிருப்போம். ஏனெனில் அவர் திறமைமிக்கவர் என்பது ஊர் அறிந்த உண்மை. இவ்வாறு இந்த வைத்தியர் குறைந்த கட்டணம் அறவிடுவது என்பது “போதும்” என்ற ஞான நிலைக்கு ஒப்பானது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: