2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….!

இரு நாட்களில் 80 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் , தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது புதிதாக 80 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இம்மாதம் 252 கொரோனா தொற்றாளர்கள் இனம் காண்பட்டு தற்போது வரை 759 தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்பொழுது அடையாளம் காணப்பட்டவர்களில் 29 பேர் தலைமன்னார் பியர் பகுதியில் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்ளெனவும் , ஒருவர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தராகவும் காணப்பட்டுள்ளார்.

மேலும் 2 பேர் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ,25 பேர் நடுக்குடா பகுதியில் உள்ள கடல் உணவு பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மன்னார் நகர பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 14 பேரும்,மேலும் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அங்கு எடுக்கப்பட்ட பீ.சி.ஆர்.மாதிரிகள் கொழும்பு ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மரபனு பகுப்பாய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொற்று ஏற்பட்ட வைரஸ் புதிதாக திரிவடைந்த வைரசின் ஏதாவது ஒன்றா?என்கின்ற முடிவுகள் ஒரு வாரத்தில் கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கின்றோம் என்றும் கூறினா அத்துடன் தற்போது நூறு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டால் 6 பேரூக்கு தொற்று உறுதி செய்யப்படுகின்றது.

இது அபாயகரமான நிலமையாகும்.எனவே மக்கள் இதனை உணர்ந்து பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இதேவேளை நேற்றைய தினம் மன்னாரில் சமூக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. முதல் கட்டமாக மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற 494 பேரூக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

எஞ்சிய நபர்களுக்கும், நடுக்குடா பகுதியில் உள்ள கடல் உணவு பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றவர்களுக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் மாவட்டத்தில் இது வரை 5 கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: